×

விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர் நிலம், பாசி மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள்

தா.பழூர் : அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தில் குறுவை நெல் சாகுபடி பல்வேறு பயிர் பருவங்களில் உள்ளது. குறிப்பாக தற்சமயம் நடவு செய்து 30 நாட்களான வயல்களில் பாசி படர்ந்து பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வளர்ச்சி குறைந்து கருகிய நிலையில் காணப்படுகிறது.கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகுகண்ணன் மைய உழவியல் தொழில்நுட்பவல்லுனர் திருமலைவாசன் ஆகியோர் அணைக்குடி மற்றும் புரந்தான் கிராம பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டனர்.

கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் கோ.அழகுகண்ணன் அவர்கள் கூறுகையில் ஆழ்துளை கிணற்று நீரின் உப்புத் தன்மை அதிகரிப்பின் காரணமாக வயல்களில் பாசி படர காரணமாகிறது. எனவே இதனை மேலாண்மை செய்ய கீழ்காணும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதற்கு காரணம் பாசன நீரில் அதிகப்படியான உப்புத்தன்மை 1.4-1.75 மற்றும் கார அமிலத்தன்மை 8.1 முதல் 8.3 வரை உள்ளது.

தண்ணீரை எப்போதும் அதிகப்படியாக தேக்கி வைத்திருத்தல் மற்றும் நிலம் சமம் இல்லாதது.அதிகப்படியான மண்ணின் கார அமிலத்தன்மை மற்றும் உப்புத்தன்மை. வயதான நாற்றுக்களை நடவு செய்திருப்பது.நாற்றங்கால்களில் யூரியா இடுவது இதற்கு காரணம்.இதனை கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்தில் களர் மற்றும் உவர் நிலங்களில் அவசியம் மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து மண்ணை சீர்திருத்தம் செய்து கார அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் வேண்டும்.

நடவுக்கு முன்னர் பசுந்தாள் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிரிட்டு 45 நாட்கள் கழித்து நிலத்தில் மடக்கி உழுதல் உடன் பசுந்தழை பயிர்களையும் இட்டு உழவு செய்தல் வேண்டும். மேலும் தொழு உரம் ஏக்கருக்கு குறைந்தது 5 டன் அடியுரமாக இடுதல் வேண்டும்.விவசாயிகள் உவர் மற்றும் களர் தன்மையை தாங்கி வளரும் நெல் ரகங்களான திருச்சி 3,திருச்சி 4 மற்றும் திருச்சி 5 போன்றவற்றை தேர்வு செய்து பயிர் செய்ய வேண்டும். நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் அடியுரமாக பாஸ்பேட் உரங்களான டிஏபி,கலப்பு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்தப்பட்டால் பாசி மற்றும்ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுக்கள் கருகிவிடும் நிலை ஏற்படுவதால்பாஸ்பேட் உரங்களின் பயன்பாட்டை குறைத்து அதற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் ஏக்கருக்கு ஒரு கிலோ இடுதல் அவசியமாகும்.

நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் நன்கு வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வைத்தல்அவசியம் ஆகும். புழுதி உழவு செய்யும்பொழுது ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் இட்டு 24 மணி நேரம் நீரை நிறுத்தி பின்னர் வடிகட்டுதல் மூலம் மண்ணில் உள்ள உப்பின்அளவை குறைப்பதோடு பாசிகளினால் ஏற்பட்ட மண் காற்றோட்டம் தடுப்பை சரி செய்யமுடியும். நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகபடியான நீர் தேக்கி வைப்பதை தவிர்க்கவேண்டும்.

மேலும் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் வயல் நீர் குழாய் அமைத்து நீரைசிக்கனமாக பாய்ச்சுதல் அவசியமாகும். அடி உரம் இடும் பொழுது தொழு உரத்துடன் 200 கிலோ ஜிப்சம் மற்றும் 15 கிலோ ஜிங்சல்பேட் போன்றவற்றை தவறாமல் இடவேண்டும். மேலும் பாசியால் பாதிக்கப்பட்டவயல்களில் பயிர்களின் வளர்ச்சி குறைவாக இருக்கும். எனவே பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை விட 20 முதல் 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும். தொழில்நுட்பங்களை விவசாயிகள் தவறாமல்கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

The post விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர் நிலம், பாசி மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Tha.Pazhur ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED தா.பழூர் மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்